சமூகத்திற்கும் பயனுள்ள படைப்பாளியாக இருக்க விரும்பும் கபிலன்வைரமுத்து

நண்பர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்,

‘எமக்குத் தொழில் எழுத்து’ என்று எனக்கு உறுதி தந்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொலைக்காட்சி ஊடகத்தை அடிப்படையாகக் கொண்ட மெய்நிகரி என்ற என் நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாடப்பொருளாக கற்பிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி தந்தது. எழுதுகிற எழுத்து கல்வியாக மாணவர்களைச் சென்றடையும்போது அது இரட்டிப்பு ஆனந்தம் தருகிறது.

“இயக்குநர்களுக்கும் – இசையமைப்பாளர்களுக்கும் – பாடலாசிரியர்களுக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இருப்பது போல, தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர்களுக்கும் தெளிவான பணிமுகம் வேண்டும். காலப்போக்கில் உருவாகும்” – பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள். அதன் அடிப்படையில் சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

அநேகன் படத்தில் ‘தெய்வங்கள் இங்கே’ என்ற பாடலுக்காக இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களை சந்தித்தபோது என் எழுத்து விருப்பங்களை தெரிவித்தேன். விரைவில் வெளிவரவிருக்கும் ‘கவண்’ திரைப்படத்தில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் படம் நெடுக பங்களிக்கின்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அவரோடு பயணித்த இந்த ஆண்டு கலகலப்பும் கல்வியும் நிறைந்த கல்லூரி ஆண்டைப் போல் இருந்தது. தற்போது மேலும் சில மூத்த இயக்குநர்களோடு பணியாற்றத் தொடங்கியிருக்கிறேன். தீவிரமான ரசிகர்கூட்டம் ஆர்வமாக எதிர்பார்த்துகொண்டிருக்கும் படங்களில் அங்கம் வகிப்பதன் மூலம் வெகுசன சினிமாவின் வெவ்வேறு பரிமாணங்களை அறியமுடிகிறது.

மூத்தத் தலைமுறையோடு பணிபுரிகிற அதே சமயம், என்னைப் போல் வளர்ந்து வரும் தலைமுறையோடும் கை கோர்த்திருக்கிறேன்.கெளதம்மேனன் அவர்களின் உதவி இயக்குநர் மனு ஆனந்த், மிஷ்கின் அவர்களின் குழுவில் இருந்த பிரியதர்ஷனி, தரணி அவர்களிடம் பணிபுரிந்த ஹரிபாஸ்கர் போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதும்போதும் – இந்திரஜித் படத்திற்காக கிருஷ்ணபிரசாத், மதியால் வெல் படத்திற்காக பாலமுரளி போன்ற பல புதுமுக இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போதும் அவர்களின் கண்கள் வழி என் உலகம் விரிகிறது.

மென்பொருள் பொறியாளராகத் தொடங்கி பின் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணியாற்றிக்கொண்டு பகுதி நேரமாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருந்தவன் இன்று திரைத்துறையில் முழுநேர எழுத்தாளராக இயங்குவது புதிய அனுபவமாக இருக்கிறது. என் துறைக்கும் அதன்வழி நம் சமூகத்திற்கும் பயனுள்ள படைப்பாளியாக இருக்க விரும்புகிறேன்.பெற்றோரிடம் கற்ற சில நற்பண்புகளை நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.

இயற்கை செயற்கை இன்னல்கள் கடந்து அனைவருக்கும் இனிய புத்தாண்டு
விடியுமென நம்புகிறேன்.