வ.கௌதமன் அறிக்கை – கலாச்சார யுத்தம் நடத்த வேண்டாம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை

கலாச்சார யுத்தம் நடத்த வேண்டாம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை.
மதுரைக்கு படையெடுப்போம்
மாணவ இளைஞர்களுக்கு அழைப்பு.

இயக்குநர் வ.கெளதமன்.

தஞ்சையில் விளைந்தால் தரணிக்கே சோறிடலாம் என்பது தமிழின் முதுமொழி. இன்று அதே தஞ்சையில் குடிக்க கஞ்சி கூட இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு விவசாயிகள் தூக்கில் தொங்கியும், மாரடைப்பு வந்தும் எங்கள் மண்ணில் சரிந்தபின்பும் எங்களுக்கான காவேரி மேலாண்மை வாரியம் அமைவதை மறித்து எங்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறு தழுவுதலை தடுத்து இந்திய அதிகார வர்க்கம் தொடர்ந்து திட்டமிட்டு தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வீரம், விவசாயம், வரலாறு என அத்தனையையும்
அழித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் மானமுள்ள தமிழர்களும் அடங்காப்பற்றோடு திரண்டெழுந்து போராட வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

பாய்ந்து வரும் ஆற்றை தடுத்து அணையைக்கட்டி நாற்று நட்டு உலகத்து உயிர்களுக்கெல்லாம் சோறிடும் விவசாய புரட்சியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி கற்றுத் தந்தவன் எங்கள் கரிகால பெருமன்னன். இன்று இறந்து கொண்டிருக்கும் விவசாயிகள் பட்டியலை தமிழ்நாடு அரசு எங்களிடம் தரவில்லை என்கிறது மத்திய அரசு. பணத்தை அள்ளமட்டும் படையோடு வருவீர்கள். தமிழனின் பிணத்தை கணக்கெடுப்பது மட்டும் உங்கள் வேலையில்லை என்பீர்களா?
தூய்மையான சிங்கப்பூர் தமிழை ஆட்சி மொழியாக்கி தமிழனையும் தமிழ் பண்டிகையையும் கொண்டாடுகிறது. அழகான ஆஸ்ட்ரேலியா தமிழ்தான் இந்த பூமிப்பந்தின் மூத்த மொழி தமிழை கெளரவப்படுத்த வேண்டும் என அவர்களின் பாராளுமன்றத்தில் பரிசீலிக்கிறது. உலகத்தின் நீண்ட நிலப்பரப்பைக்கொண்ட கனடா தேசம் பொங்கல் உள்ளிட்ட சனவரி மாதத்தை தமிழர் மாதமாகவே தங்களின் அரசே கொண்டாட வேண்டும் என பிரகடனம் செய்து விட்டது. அப்படியிருக்க இந்திய தேசம் மட்டும் தமிழ், தமிழனை நசிக்கிகெண்டேயிருப்பதை இனி மானமுள்ள தமிழனால் பொறுத்துக்கொள்ளவே முடியாது என்பதை மத்திய அரசின் செவிட்டு செவிகளுக்கு நாம் உணர்த்தியாக வேண்டும்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரீகம் எங்களின் தமிழர் நாகரிகம்தான் என்பதை நீங்களும் ஒத்துக்கொண்டது ஒரு மாட்டை அடக்கும் அதுவும் எங்களின் காங்கேயம் காளையை அடக்கும் தமிழனின் முத்திரையை உலகம் அறியும்.

ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் பேரினத்தைப்பார்த்து நேற்று முளைத்தவர்களெல்லாம் சிங்கத்தை அடக்க முடியுமா என்று ஏளனம் பேசுவது வெட்கத்திலும் வெட்கக்கேடானது. அரியாத்தை என்கிற எங்கள் பெரியாத்தை யானையை அடங்கிய வீர வரலாறு எங்களுடையது. சங்க இலக்கியத்தில் புலியை முறத்தால் அடித்தவள் தமிழச்சி. பின்பு புலியாகவே மாறி எதிரிகளின் சங்கை அறுத்தவளும் எங்கள் தமிழச்சி. நாங்கள் சிங்கத்தோடும் சண்டையிட்டவர்கள்தான். காலம் எங்களுக்கான நீதியினை தரவில்லை என்றால் மீண்டும் சிங்கங்களோடு மோதுவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது.
உடனடியாக மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்து எங்கள் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தடையினை நீக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய தேசத்திலிருந்து தமிழ்நாடு தனிநாடாக பிரிந்து போக தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இனி இதில் எந்த சமரசமும் இல்லை என்பதை மானமுள்ள தமிழ் இளைய சமுதாயத்தின் சார்பாக உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது அன்பான மாணவ, இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். மாடு பிடி விளையாட்டில் பங்கெடுக்க வரும் 14, 15, 16தேதிகளில் வீரம் செறிந்த மதுரை மண்ணிற்கு கூட்டம் கூட்டமாக படையெடுப்போம். அதிகார வர்க்கங்களுக்கு தமிழர்கள் யார் என்பதை நிரூபிப்போம்.
வெல்வோம்.

அன்போடு,
வ.கெளதமன்.