சி.ஜெ.ராஜ்குமாரின் ஐந்தாவது புத்தகமான ஒளி ஓவியம் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விரிவான செய்திகள்

ஒளி ஓவியம் (Introduction to the art of film lighting)

சி.ஜெ.ராஜ்குமாரின் ஐந்தாவது புத்தகமான ஒளி ஓவியம் கடந்த 18ம் தேதி பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது.

ஒளிப்பதிவாளர்கள் திரு. ராபர்ட் ஆசீர்வாதம், திரு. பிரியன், திரு. நடராஜன் சுப்ரமணியம், திரு, மகேஷ் முத்துசுவாமி, திரு, அருள் மூர்த்தி மற்றும் இயக்குநர் திரு.ராம் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தலைசிறந்த படத்தொகுப்பாளர் திரு. B. லெனின் தலைமையில் ஒளிப்பதிவாளர் திரு. பி.சி.ஸ்ரீராம் வெளியிட திரு. நாசர் புத்தகத்தினைப் பெற்றுக்கொண்டார்.

திரு. பி.சி.ஸ்ரீராம் பேசும்போது எளிமையான தமிழில் ஒரே வாசிப்பில் படித்து முடித்துல்விடக்கூடிய தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம் என்றார்.

நூற்றாண்டுகளைக் கடந்த கலைவடிவமான சினிமாவில் மூடநம்பிக்கைகளை விடுத்து துறைசார்ந்த கல்வியால் மட்டுமே உயரங்களைத் தொடமுடியும் என்றார் திரு. நாசர். தான் நடிக்க வந்த காலங்களில் ஒளிப்பதிவு பற்றி படிப்பதற்கான புத்தகங்களைத் தேடி அலைந்ததைப் பற்றியும் அவை ஆங்கிலப்புத்தகங்களாக இருந்ததனால் புரியாமல் படிக்க முடியாமல் போய்விட்டதென்றும், அதனால் ஒரு ஒளிப்பதிவாளரை தமிழ்த்திரையுலகம் இழந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

தாய்மொழியில் சினிமாத் தொழில்நுட்பத்தை கற்க விரும்பும் இளைஞர்களுக்கு ராஜ்குமாரின் முந்தைய பிக்சல் புத்தகத்தை தான் வாங்கி பல மாணவர்களுக்குப் பரிசளித்ததாகவும் இந்தப் புத்தகத்தையும் அவ்வாறே பலருக்கும் அளிக்கப்போவதாகவும் குறிப்பிட்டார் எடிட்டர் திரு. B. லெனின் அவர்கள்.

விழாவில் பேசிய அனைவரும் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் திரைப்படத்திற்கு ஒளியமைக்கும் தொழில்நுட்பம் எழுதப்பட்டுள்ளதையும் புத்தகத்தின் வடிவமைப்பையும் வெகுவாகப் பாராட்டினர்.

தனது ஏற்புரையில் நூலாசிரியர் சி.ஜெ.ராஜ்குமார் ஒளியமைக்கும் முறை பற்றி சிறப்பான மேலும் பல தகவல்களுடன் இப்புத்தகத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளிவரும் என்றார்.

பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன் நன்றியுரையாற்ற விழா நிறைவுற்றது.

ஒளி ஓவியம் (Introduction to the Art of Film Lighting)

விலை: 350/-

பதிப்பு: டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட்.

பக்கங்கள்: 118.